பிப்.16ஆம் தேதிவரை பணம் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன்கள் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதில் விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி, நீரவ் மோடி ஆகியோரின் நிறுவனங்கள் சார்பாக வாங்கப்பட்ட கடன்களும் அடங்கும்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலளித்து மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''இது வங்கி நடைமுறையின்படி கணக்கியல் ரீதியாக நீக்கப்படும் செயல்தான். அவர்களிடமிருந்து கடனைத் திருப்பி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடக்கும்'' என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ''கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் விசாரணையை எதிர்கொண்டுவரும் நபர்களுக்கும், கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் இந்தியாவிலிருந்து தப்பியோடியவர்களுக்கு ஏன் இந்த வங்கி விதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே காங்கிரசின் கேள்வி'' எனத் தெரிவித்தார்.
மேலும், ''தப்பியோடியவர்களிடமிருந்து கடனைத் திருப்பிப் பெற முடியுமா என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் தொழில்நுட்ப விதி நீரவ் மோடி, விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி ஆகியோருக்குப் பொருந்தாது'' என்றார்.
இதையும் படிங்க:'நண்பர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு' - ராகுல் கண்டனம்