ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “ஆளும் கட்சியினர் கூறுவது போல், எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
கட்சி காரியங்களில் சிக்கல்கள் இருந்தாலும், தொண்டர்கள் மத்தியில் பலம் வாய்ந்தே காணப்படுகிறோம். அவர்கள் எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக வீண் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
'ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்திருச்சு' - நடிகை ரோஜா
மேலும், “2014ஆம் ஆண்டு ஆந்திரா பிரிக்கப்பட்டபோது மிகவும் சிக்கலிலிருந்தது. அப்போது மக்களுக்காக குடும்பத்தைக் கூட கவனிக்காமல் இரவு பகலாக உழைத்தேன். அப்படி இருந்தும் மக்கள் என்னைத் தோற்கடித்து விட்டனர். அதில் எனக்கு வருத்தம் உண்டு.
இப்போதுள்ள ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு, மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பிறகட்சித் தலைவர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்குகள் போடுகின்றனர். யார் என்னிடம் நல்ல முறையில் பேசினாலும், நானும் அவர்களிடம் நன்றாகவே பேசுவேன்.
ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோபோல நடந்துகொள்கிறார். அவர் தலைமையிலான ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.