மத்திய உளவுத்துறைக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும் உள்துறை அமைச்சகம் ‘இசட் பிளஸ்’ உள்ளிட்ட உயர்மட்ட கமாண்டோ படை பாதுகாப்பை பரிந்துரைத்து வருகிறது.
அரசின் பாதுகாப்பு மறுஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில், சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சீராய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அவரது மகன் நாரா லோகேஷின் பாதுகாப்பு இசட் வகையில் இருந்து, எக்ஸ் வகைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கலா வெங்கட ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் இசட் பிளஸ் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை, 146 இருந்து 67 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் ‘ இசட் பிளஸ் ’ பாதுகாப்பு குறைப்பு ஏறத்தாழ 50 விழுக்காடாக அது குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவின் இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதன் பழைய நிலைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும்.
சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை மாநில காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் இந்த பாதுகாப்பு குறைப்பு முடிவால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என்ற அச்சம் எங்களுக்குள் எழுகிறது.
தவறான நோக்கங்களுடனும், அரசியல் உள்நோக்கத்தோடும் இந்த பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கையை ஜெகன் அரசாங்கம் எடுத்துள்ளது. முன்னதாக, ஆந்திரப்பிரதேச மாநிலம் அரக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் மற்றொரு தலைவரான சிவேரி சோமா ஆகியோரை பயங்கரவாதிகள் சமீபத்தில் சுட்டுப் படுகொலை செய்ததை இந்த அரசாங்கம் மறந்துவிட்டதா?.
இந்த அரசாங்கத்தின் முடிவானது, அரசியல் தலைவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்தையே குறிக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றம், நாயுடுவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2003 ஆம் ஆண்டில், பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவில் இருந்தபோது, திருப்பதியில் மாவோயிஸ்டுகளின் படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க : பிகாரில் பி.கே. அரசியல் தொடக்கம்.! என்ன செய்யப் போகிறார் நிதிஷ்..!