கரோனா பாதிப்பினை தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்கள் தங்களது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தஞ்சை மக்களவை தொகுதிக்கு நான்கு கோடி ரூபாயும், திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதிக்கு கீழ் வரும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கோடி ரூபாயும் என மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை தஞ்சை தொகுதிக்கு எதற்காக என்ற கேள்வியோடு பழனிமாணிக்கத்தை தொடர்புகொண்ட நமது டெல்லி செய்தியாளருக்கு அளித்த பேட்டி இதோ...!
“தஞ்சாவூர் தொகுதிக்கு அதிக தொகை ஒதுக்கி உள்ள காரணத்தினால் இங்கு அதிக தொற்று இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உலக நாடுகளில் உள்ள தற்போதைய சூழலை உற்று கவனிக்கும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால்தான் நமது நாட்டில் இத்தகைய பிரச்னை தலைதூக்கியுள்ளது என்பது புரிகிறது.
சீனாவில் டிசம்பரில் ஆரம்பித்த இந்த நோய், மார்ச் மாதத்திலும் தொடர்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டு நாம் முன்கூட்டியே செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஆயிரம் பேரை தங்கவைத்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்ற வகையிலும், கண்காணிக்கின்றன வகையிலும் நாம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.
அதேபோல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவினை அளித்து அந்த காலக்கெடுவிற்குள் இந்தியாவிற்குள் வந்துவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் வெளிநாட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம்.
அதேபோல இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரையும் ஒரு குறிப்பிட்ட தேதியை அறிவித்து அந்தத் தேதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவிப்புகள் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தேவையிருந்திருக்காது.
தற்போது பார்த்தீர்களென்றால் ஒரிசாவை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பேருக்காக ஒரு மருத்துவமனை கட்டுகின்ற முயற்சியில் அந்த அரசு உள்ளது. இன்னும் நான்கு தினங்களில் அந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை பற்றி பேசும்போது அவர் கொஞ்சம் உற்சாகமாக குறைவாக செயல்படுவார் என்று பேசப்படும். ஆனால் அது உண்மை கிடையாது. அவர் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பார்.