ஜனார்த்தன் சர்மா என்பவர் தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளையும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவுக்குச் சொந்தமான பிடரி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர், அந்த ஆசிரமத்தின் கிளையான குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நான்கு பெண் குழந்தைகளும் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனையறியாத, ஜனார்த்தன் சர்மா கடந்த நவம்பர் இரண்டாம் தேதி, பிடரி ஆசிரமத்தில் தன் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, நால்வரும் அகமதாபாத்திற்கு இடமாற்றப்பட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அகமதாபாத் ஆசிரமம் சென்ற ஜனார்த்தன் சர்மாவை உள்ளே அனுமதிக்காமல், ஆசிரம ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, காவல் துறையினரின் உதவியோடு ஆசிரமம் சென்ற ஜனார்த்தன் நீண்ட மோதலுக்குப் பின், தன்னுடைய இரண்டு இளைய மகள்களை மீட்டார். ஆனால், மூத்த மகள்களான லோபமுத்ரா(21), நந்திதா (18) ஆகிய இருவரும் அவருடன் செல்ல சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனார்த்தன் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள இரு மகள்களையும் மீட்டுத் தருமாறு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனடிப்படையில், நித்யானந்தா உட்பட ஆறு பேர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அகமதாபாத் ஆசிரமத்தில் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.