காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடும்விதமாக இந்தியா அவரின் பல சிந்தனைகளையும் நினைவுகூருகிறது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மிக முக்கியமானது. பல ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் காந்தியடிகளின் கொள்கைகளும் சித்தாந்தங்களும் அன்றே செயல்பட்டன. இக்கட்டுரையானது தூய்மை, சுகாதாரம் குறித்து காந்தியின் போதனைகளும் அனுபவங்களும் எப்படி இன்று அனைவரும் கொண்டாடும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை ஈர்த்தது என்பதை குறித்ததாகும்.
காந்தியின் முக்கொள்கை:
இந்தியாவில் தூய்மையை ஊக்குவிப்பதில் காந்தி ஒரு முன்னுதாரணமாக இருந்துவந்தார். மேலும் தூய்மை, தீண்டாமை, தேசிய சுயாட்சி ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று எவ்வாறு பின்னிப்பிணைந்திருந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.
இந்தச் சூழலில்தான், 'நாமே துப்புரவாளர்களாக மாற வேண்டும்' என்று காந்தி அறிவுறுத்தினார். இந்த வரியானது தூய்மையை தனிப்பட்ட ஒரு பொறுப்பாக மாற்றுவதோடு அல்லாமல், சமூகத்தில் அந்தக் காலக்கட்டத்தில் பரவிக்கிடந்த தீண்டாமையை அகற்றுவதற்கான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
வெறும் பேச்சில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயலிலும் சாதித்துக் காட்டினார் காந்தி. இந்தியாவில் தூய்மையை ஊக்குவிப்பதில் அவர் நேர்மையாக செயல்பட்ட பல சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.
காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு வருகைபுரிந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டதை விளக்கினார்.
இந்நேரத்தில்தான் அவர் காங்கிரஸ் முகாமிலிருந்த மோசமான சுகாதார நிலைமைகளைக் கண்டார். அங்குள்ள பணியாளர்களை அவர் சுத்தம் செய்யச் சொன்னபோது, அவர்கள் அது 'துப்புரவாளரின் வேலை' என்று பதிலளித்தார்கள். அந்நேரத்தில் மேற்கத்திய உடை அணிந்திருந்த காந்தி, துடைப்பத்தை எடுத்து வளாகத்தை சுத்தம் செய்து அங்கிருந்த பணியாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
பிறகு அவர் இந்தியா திரும்பியதும், காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச தலைமை நிலையை எய்திய சமயத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் 'பாங்கி' என்ற பெயரில் துப்புரவுப் பணியாளர் குழு உருவாகியிருந்தது. அவர்கள் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், காந்தியின் அழைப்பால் முற்பட்ட வகுப்பினர்களும் இந்தக் குழுக்களில் அவரோடு சேர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். தூய்மைக்கான மகாத்மாவின் அர்ப்பணிப்பு இச்சம்பவத்தில் அதிகம் பேசுபொருளானது.
காந்தியின் இந்த அக்கறையானது தென்னாப்பிரிக்காவில் அவரது சத்தியாகிரக பரப்புரையிலிருந்துதான் வேரூன்றியது. அந்நேரத்தில் அவரது முதன்மை கவனம் என்பது தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட இந்தியர்கள் பற்றிய எதிர்மறை கருத்தை ஒலிப்பதாக இருந்தது. இந்தியர்களுக்கு சுகாதாரம் இல்லாததால் அவர்கள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்னும் வெள்ளையர்களின் கருத்தைதான் காந்தி எதிர்த்தார்.
தேசிய சபைக்கு (National Assembly) இது குறித்து காந்தி ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்தியர்கள் தங்கள் ஐரோப்பிய சகாக்களுக்கு சுகாதாரத்தில் சளைத்தவர்கள் அல்ல என்று எழுதியிருந்தார். மேலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இந்தியர்களிடையே சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார்.
காந்தியின் சுகாதார கனவினை நனவாக்குவதற்கு அரசு பல முயற்சிகள் எடுத்தும், அதற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மனித மலத்தை மனிதனே அள்ளும் அவல நிலைதான். இந்த நிலையை போக்க புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி நிதி ஒதுக்கி அரசு கூடுதல் கவனம் செலுத்துவதே. அவ்வாறு செய்தால் காந்தி கனவுகண்ட தூய்மை பாரதத்தை நாமும் நேரில் காணுவோம்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் சிறப்புப் பாடலை பகிர்ந்தார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்!