உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் எதிரொலியாக பிகார் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும், மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் இதர செயல்பாடுகளை மேற்கொள்ளும் விதமாக 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்த தொகை உடனடியாக விடுக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 2020-21 நிதியாண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு ரூ. ஐந்தாயிரத்து 18 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. இரண்டாயிரத்து 416 கோடியும் விடுவிக்க வேண்டும். இந்த தொகையை நிதியாண்டின் முதல் காலாண்டில் விடுவித்தால், குடிநீர் திட்டம், வடிகால் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த மாநில அரசிற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.