காஷ்மீரில் 4ஜி இணைய சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஹுஃபெஸா அகமதி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அம்மனுவில், “ஜனநாயக அமைப்பு முறையில் சுதந்திரமான பேச்சுரிமை என்பது மிகவும் முக்கியமான காரணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இணையதள சேவைகளை பெறுவது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிக்கவும், மருத்துவர்கள் தங்களது நோயாளிகளுக்கு சிகிச்சையைப் பற்றிய அறிவுரைகளை வழங்கவும் 4ஜி இணைய சேவைகளை மீண்டும் அளிக்கப்பட வேண்டும்”என கோரியிருந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் ஊடக வல்லுநர்கள் சங்கத்தின் அறக்கட்டளை சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா, “கோவிட்-19 பெருந்தொற்றுநோய் பாதிப்பால் ஜம்மு-காஷ்மீர் நெருக்கடியில் மூழ்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஜம்மு-காஷ்மீரில் தொடரும் கஷ்டங்கள் தொடர்பான கவலைகளை நீதிமன்றம் அறிந்திருக்கிறது.
அதே நேரத்தில் இந்த நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு சீரானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இணையதளத்தை பயன்படுத்தும் உரிமை அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான உரிமைகளில் ஓர் அங்கம்தான் என்றாலும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் பதிலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதால் தற்போது 4ஜி இணைய சேவைகளை மீண்டும் வழங்க முடியாது”என கூறினார்.
இதையும் படிங்க :நிஜ மீன்களைப் பிடிக்க பொம்மை மீன்களைப் பயன்படுத்தும் மீனவர்கள்!