தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“74 வயதில் 105 நாட்கள் சிறை வாசம்” ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம்.! - ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கியது.

Supreme Court grants bail to former Finance Minister & Congress leader P Chidambaram
Supreme Court grants bail to former Finance Minister & Congress leader P Chidambaram

By

Published : Dec 4, 2019, 11:47 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு மொரிஷீயஸ் நாட்டிலிலிருந்து வெளிநாட்டு முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அலுவலர்கள், ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் நிதி மோசடி வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் அவர் நீதிமன்றத்தில் பிணை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.
எனினும் அவர் நீதிமன்ற பிணைக்காக டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து முயற்சித்து வந்தார். இதன் முயற்சியாக சிபிஐ வழக்கில் அவருக்கு நீதிமன்ற பிணை (ஜாமீன்) கிடைத்தது. எனினும் அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட நிதி மோசடி வழக்கில் அவருக்கு பிணை கிடைக்கவில்லை.

இதனால் அவர் திகார் சிறைச்சாலையில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற பிணை வேண்டி, ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நீதிமன்ற பிணை மனு, நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நவம்பர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் துஷார் மேக்தா ஆஜராகி ப.சிதம்பரத்தின் நீதிமன்ற பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், “நிதி மோசடியால் ஏதோ தனிப்பட்ட நபர் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த நாடே பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியது. அரசின் மீதான வெகுஜன மக்களின் நம்பிக்கையை அசைத்தது” என்று தெரிவித்திருந்தார்.

ப.சிதம்பரம் மீது அரசு வழக்கறிஞர் சுமத்திய இந்த குற்றச்சாட்டுகளுக்கு, எதிர்தரப்பு வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அசோக் சிங்கி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு இணைப்புகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மேலும் அவர் சாட்சி மற்றும் ஆதாரத்தை அழித்தார் என்பதற்கும் எவ்வித ஆதாரமோ அல்லது ஆவணமோ இல்லை. அது குறித்து ஒரு தகவலும் இல்லை. ஆகவே அவருக்கு நீதிமன்ற பிணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 4ஆம் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்தி வைத்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி பானுமதி, ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதன்மூலம் 74 வயதான ப.சிதம்பரம் 105 நாட்கள் சிறை வாசத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்ப உள்ளார்.

வழக்கின் சுருக்கம்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அமலாக்கத்துறை அலுவலர்கள் அக்டோபர் 16ஆம் தேதி கைது செய்தனர்.
சிபிஐ அலுவலர்கள் கைது செய்த வழக்கில், அக்டோபர் 22ஆம் தேதி ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நீதிமன்ற பிணை வழங்கியது.
தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற பிணை கிடைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட ரூ.305 கோடி பணம் முதலீடாக பெறப்பட்ட வழக்கில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். இதனால் அவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இதையும் படிங்க: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... மதுரையில் நக்கீரர் அவதாரம் எடுத்த ப. சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details