கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்தார். சுனந்தா புஷ்கர் அதிகமான விஷம் உட்கொண்டதால் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டாலும், மரணத்துக்கு சசி தரூர்தான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதற்கான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், சுனந்தா புஷ்கர் கொலையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவருடைய கடைசி ட்வீட்களையும் சேர்க்குமாறு சசி தரூர் தரப்பு வழக்கறிஞர் விகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து விகாஷ் பேசுகையில், ”சுனந்தா புஷ்கர் உயிரிழந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி காலை 4.46 மணி வரை ட்வீட் செய்துள்ளார். எனவே அதனையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும். சுனந்தா புஷ்கர் உயிரிழப்புக்கு இதுவரை சரியான காரணம் தெரியவில்லை. குற்றப்பத்திரிகையின்படி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்படவும் இல்லை, தற்கொலை செய்துகொள்ளவும் இல்லை” என்றார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிக்கலாமே: சுனந்தா புஷ்கர் மரணம்: சசிதரூரை கைது செய்ய சாட்சிகள் உள்ளன என காவல்துறை தரப்பில் வாதம்!