நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்கள் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் தொற்று அறிகுறிகள் இருப்போருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பு தெரிவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த கர்நாடகா மருத்துவக் கல்வி அமைச்சர் சுதாகரிடம் செய்தியாளர்கள் கேள்வி ஏழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனா பராமரிப்பு மையம், அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கார்ப்பரேட் மருத்துவமனை, தேவையான வசதிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் என ஆறு இடங்களை அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வெளி வரும். இதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தகுந்த இடைவேளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் இருக்கும் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். பெங்களூரு முழுவதும் 400 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அரசு பரிந்துரைத்த தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு சுவர்ணா ஆரோக்கிய சூரக்ஷா அறக்கட்டளையின் கீழ் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தால், உடனடியாக 1922 என்ற ஹெல்ப் லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும். அதைவிட அதிகப் பணம் வசூலித்தாலோ அல்லது சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தாலோ அம்மருத்துவமனைகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும்" எனவும் தெரிவித்தார்.