கார்ப்பரேட் மற்றும் அந்நிய முதலீடுகளால் நிறுவப்படும் ஆலைகள் மூலம் இயற்கை வளம் சுரண்டப்படுவது உலகம் எங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆலைகள் நிறுவப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. இப்படியான ஒரு ஆலையை மஹாராஸ்டிர மாநிலம் ரத்தினகிரியில் (நானார்) உருவாக்க திட்டமிட்டது ஆளும் பாஜக அரசு.
1992-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (Maharashtra Industrial Development Corporation) ரத்தினகிரியின் கடலோரப் பகுதியில் ஸ்டெர்லைட் என்ற உருக்காலைக்காக கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்குகிறது. ரத்தினகிரி மக்கள் விவசாயம், தோட்டக்கலை, மீன்பிடித் தொழிலை நம்பி இருப்பவர்கள். மாம்பழத்தில் மிகவும் பிரபலமான அல்ஃபோன்ஸா அந்த மண்ணில்தான் அதிகமாக விளைகிறது. அல்ஃபோன்ஸா மாம்பழத்தின் வளர்ச்சி சிறு சுற்றுச்சூழல் கேடையும் தாங்காது. ரத்தினகிரி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை அங்கு அமைவதை விரும்பவில்லை. போராட்டம் வெடிக்கிறது. இந்தப் போராட்டம் ஓராண்டு காலம் நீடித்தது. மக்களின் போராட்டத்தை மதிக்காத மாநில அரசாங்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கான கட்டுமானப் பணியை மேற்கொள்கிறது.
1993 டிசம்பர் 13 அன்று, 20,000 மக்கள் ஒன்றாக திரண்டு சென்று ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை அடித்து நொறுக்குகின்றனர். வேறு வழியின்றி மாநில அரசு பின்வாங்குகிறது. ஸ்டெர்லைட் ஆலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 1997-ஆம் ஆண்டு அதே ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியில் நிறுவப்படுகிறது.
இயற்கை வளத்தையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் விட்டுக்கொடுக்காத போராட்ட குணம் நிறைந்த ரத்தினகிரி மக்களுக்கு அடுத்ததாக வந்த தலைவலிதான் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய பெட்ரோலிய ஆலையாக உருவாகவுள்ளது. இதனை அமைக்க மாநில அரசின் கைவசம் உள்ள நிலம் போக 15,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
இந்த ஆலை ரத்தினகிரி (நானார்) பகுதியில் அமையும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஸ்டெர்லைட்டை போராடி விரட்டிய அப்பகுதி மக்கள், இந்த முறை நாதியற்றவர்களாக்கப்பட்டு அடித்துத் துரத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. ஏனென்றால், ஸ்டெர்லைட் போல் இது வெறும் 700 கோடி ரூபாய் திட்டமல்ல, இந்தத் திட்டத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய். இதில் சவுதியின் எண்ணெய் நிறுவனங்களான சவுதி அரம்கோ (Saudi Arabian Oil Company), அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவை இத்திட்டத்துக்கு விளம்பரதாரர்களாக செயல்பட இருக்கின்றன. 2018-ஆம் ஆண்டே இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தான், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.