சீனாவின் வூஹான் நகரில் தோன்றி உலகையே மிரட்டிவருகிறது கொரோனா வைரஸ். 2019 டிசம்பர் மாதம் இறுதியில் பரவத் தொடங்கி வெறும் மூன்றே மாதங்களில், இந்த வைரஸ் காரணமாக உலகளவில் சுமார் நான்கு ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பால் "பெரும் தொற்றுநோய்" (Pandemic) என வரையறுக்கப்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளில் திணறிவரும் சூழலில், தேவையில்லாமல் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலரும், கொவிட்-19 வைரஸ் (கட்டுப்படுத்தலுக்கான) ஒருங்கிணைப்பாளருமான தாமு ரவி கூறுகையில், "கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. யாரும் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. தேவையிருந்தால் மட்டும் பயணம் செய்யுங்கள்.
விமான எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளும்படியோ, சேவையை நிறுத்தும்படியோ எந்த விமான நிறுவனத்துக்கும் நாங்கள் உத்தரவிடவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவாகும். அதுகுறித்து அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்" என்றார்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "அது ஒருங்கிணைப்பாளர் எடுக்க வேண்டிய முடிவு . இந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பது நல்லது" என்றார்.