கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களின் வரி வருவாய்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசு தங்களுக்கு உடனடியாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இந்தச் சூழலில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை பெற வேண்டி நிறுவனங்கள் கடன் பெறுவது தொடர்பான முன்மொழிவை ஒன்றை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த முன்மொழிவை முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை இடைவெளியைக் குறைக்க மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்கலாம் என்ற ஒரு ‘ஆறுதல் கடிதத்தை’ மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இவை உண்மையில் எந்த மதிப்பும் இல்லாத ஆறுதலான வார்த்தைகள். மாநிலங்களுக்கு தேவைப்படுவது பணம். வளங்களை திரட்டவும், ஜிஎஸ்டி இழப்பீட்டின் பற்றாக்குறையை மாநிலங்களுக்கு செலுத்தவும் மத்திய அரசுக்கு மட்டுமே பல வழிகள் உள்ளன.
மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால், ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவுகள் மீண்டும் குறையலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசின் இந்த முன்மொழிவை தமிழ்நாடு, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் நிராகரித்துள்ளன. தங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் இந்த மாநிலங்கள் வலிறுத்தியுள்ளன.
இதையும் படிங்க:'தவறான பொருளாதார கொள்கையால் வேலைவாய்ப்பு இல்லை' - ராகுல் காந்தி காட்டம்