புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று (நவ.1) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் , புதுச்சேரி மேலிடபார்வையாளர் சஞ்சய் தத், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏவி சுப்ரமணியன், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி மாநில வளர்ச்சியை முடக்கச் செய்கின்ற வகையில் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசும், ஆளுநர் என்ற போர்வையில் பாஜக அரசின் பிரதிநிதியை இங்கு அனுப்பி காங்கிரஸ் அரசை முடக்கி, புதுச்சேரியை தமிழ்நாடோடும், மாகே பகுதியை கேரளாவோடும் , ஏனாம் பகுதியை ஆந்திர பிரதேசத்தோடும் இணைக்கின்ற முயற்சியில் மத்திய அரசும், புதுச்சேரி மாநில ஆளுநரும் ஈடுபட்டுருப்பதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.