நவம்பர் 22, 2005-ஆம் ஆண்டு சொராபுதீன், அவரின் மனைவி கௌசர் பீ, அவரின் உதவியாளர் துள்சி பிரஜாபதி ஆகியோர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு குஜராத் காவல்துறையால் அகமதாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் வீட்டுகாவலில் வைக்கப்பட்டார்.
நவம்பர் 26ஆம் தேதி குஜராத்-ராஜஸ்தான் காவல்துறையினர் உள்ளடக்கிய சிறப்பு காவல்படையால் சொராபுதீன் எண்கவுன்டர் செய்யப்படுகிறார். அதேமாதம் 29ஆம் தேதி கௌசர் எரிக்கப்பட்டு உடல் அகற்றப்படுகிறது.
பிரஜாபதியை டிசம்பர் 27ஆம் தேதி குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் வைத்து காவல்துறை எண்கவுன்டர் செய்கின்றனர். 2005ஆம் ஆண்டு சொராபுதீன் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் கொலையை விசாரிக்க கோரிக்கை விடுக்கிறது. உச்சநீதிமன்றமும் கொலை விசாரணையை மாநிலத்தில் உள்ள சிஐடி விசாரிக்க பரிந்துரை செய்கிறது.
2007ஆம் ஆண்டு குஜராத் அரசு, கௌசர் எரிக்கப்பட்டு உடல் அகற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி கொலை நடந்தபோது குஜராத் மாநிலம் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சன்த் கட்டாரியா உள்பட 38 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
சிபிஐ, அமித் ஷாவை 2010ஆம் ஆண்டு கைது செய்கிறது. அதே ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி அவர் ஒரு லட்சம் பிணையில் விடுவிக்கப்படுகிறார். 2012 ஆம் ஆண்டு மூன்று கொலை வழக்கையும் ஒரே வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 2014ஆம் ஆண்டு அமித் ஷா, குலாப்சன்த் கட்டாரியா உட்பட 15 பேரை குற்றமற்றவர் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்கிறது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சொராபுதீனின் சகோதரன் ருபாபுதீன் வழக்கு தொடர்கிறார். அதே மாதம் அந்த வழக்கை திரும்ப பெறுகிறார்.
2017ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 22 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்கிறது. 2018ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம்
22 பேரையும் குற்றமற்றவராக தீர்ப்பளித்து விடுதலை செய்கிறது.
இதனைத் தொடர்ந்து இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சொராபுதீனின் சகோதரன் ருபாபுதீன் விடுதலை செய்யப்பட்ட 22 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.