உத்தரப் பிரதேசம், மீரட் மாவட்டம், கார்கோடா பகுதியில் உள்ள ஜாம்நகரில் வசிக்கும் அமீர் என்ற இளைஞர் கேமிங்கில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். குறிப்பாக பப்ஜி கேம் விளையாடி தனது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த அமீரின் தந்தை, ”பப்ஜி கேம் விளையாடாதே, நேரம் விரையமாகும்” எனக் கூறி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அமீர், திடீரென வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, தந்தையின் கழுத்தில் பல முறை வெட்டியுள்ளான்.
தொடர்ந்து அதே கத்தியால் தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டான். இந்நிலையில், சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இருவரையும் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமீர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தினாலும், இத்தகைய வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.
தற்போது, தந்தை, மகன் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்