இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தீநுண்மி அச்சுறுத்தலால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது தொடர்பாகப் பல மாநிலங்கள் தன்னிச்சையாக எடுத்த சில முடிவுகள் நிலைமையை இன்னும் கடினமாக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவது தொடர்பாக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. பல மாநிலங்கள் தங்களது மக்களை திரும்ப அழைத்துவருவதற்கு தயாராக இல்லை.
வெளிமாநிலங்களில் தங்கியுள்ள மக்களின் நிலை மோசமடைவதற்கு முன்னதாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் தொழிலாளர்களை மீட்டுவருவது தொடர்பாகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இதுவரை மகாராஷ்டிராவிலிருந்து சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மாநிலத்திலிருந்து 32 ரயில்கள் மூலம் மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம், ஒடிசா மாநில தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்கு அம்மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் ஒடிசா அரசாங்கம் கரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்களை மட்டும் திரும்ப அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டது.
அதேபோன்று, தொழிலாளர்களை அழைத்துச் செல்ல முன்னதாக மறுத்த உத்தரப் பிரதேசம் தற்போது தங்களது முடிவுகளை மாற்றி, தொழிலாளர்களை திரும்ப அழைத்துச் சென்றுவருகிறது.
தங்களது மாநிலங்களுக்கு திரும்பச் செல்ல விரும்பும் தொழிலாளர்களின் பயணச் செலவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்த பின்னும் பிகார் மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகாராஷ்டிராவில் தங்கியிருப்பதால் அவர்கள் அனைவரையும் மீட்பது மிகவும் சிக்கலான ஒன்று. அவர்களை மீட்பதற்கான கால அவகாசம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்!