சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதையின் தளமும், நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி - சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் நிகழும். நிலவு சூரியனைவிட மிகவும் சிறியது, எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது.
நிலவுக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமார் 400 மடங்கு அதிகம். அதே நேரம் நிலவின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் சுமார் 400 மடங்கு அதிகம். எனவேதான் சூரியனும் சந்திரனும் வானில் ஒரே அளவு தோற்றம் கொண்டது போல் தோன்றுகின்றன. இதனால்தான் முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கின்றது. வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு, சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க இயலாது.
அப்போது ஒரு கங்கணம் (வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரியும். இதனை விஞ்ஞானிகள் கங்கண சூரிய கிரகணம் என்று அழைப்பர். இந்த கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.
இந்தியாவில் இதற்கு முன்னர் 2010 ஜனவரி 15ஆம் நாள் இதுபோன்ற சூரிய கிரகணம் நிகழ்ந்தது.