தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பரணிதரன். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தபோது, விஷன் 2020க்கு பாடுபட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்காக 15 ஆண்டு காலமாக இந்திய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து பல திட்டங்களை தயாரித்து அதை பிரதமர் மோடியிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அப்துல் கலாம் நினைவு தினத்தன்று கோவில்பட்டியில் இருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
சமூக ஆர்வலர் ராஜா பரணிதரன் பேட்டி இந்நிலையில் இன்று புதுச்சேரி வந்த அவர், முதலமைச்சர் நாராயணசாமியை சந்திக்க உள்ளார். இதையடுத்து தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு தனது பயணத்தை மீண்டும் தொடர உள்ளார்.
இதற்கிடையே ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டியளித்த இவர், இயற்கை சித்தா உணவு முறை குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இந்தியாவின் தலைநகர் டெல்லி என்பதை மாற்றி நாக்பூரை தலைநகராக அறிவிக்க வேண்டும். புதிய தலைநகருக்கு ஜெய்ஹிந்த் சிட்டி என்று பெயர் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 100 கோரிக்கைகளை வலியுறுத்தி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
மேலும், இதுவரை 1050 சமூக ஆர்வலர்களை சந்தித்துள்ளதாகவும், மார்ச் 25ஆம் தேதி டெல்லியில் தனது பயணத்தை முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி பொதுமக்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது?