தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில அரசின் கைப்பாவையாக எஸ்ஐடி செயல்படுகிறது - காங்கிரஸ்

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு மாநில அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

By

Published : Oct 5, 2020, 6:51 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஐபிஎஸ் அலுவலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குழு சரியான விசாரணையை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசின் கைப்பாவையாக சிறப்புப் புலனாய்வுக் குழு செயல்பட்டுவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், "பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த நாளில் இருந்தே, மாநிலத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் சேர்ந்து அமைதி காத்துவருகின்றன. சம்பவம் நடந்து 14 நாட்களுக்கு பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. வழக்கு சிபிஐக்கு மாற்றிய பிறகும் இன்னும் விசாரணை தொடங்கப்படாமல் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை எனத் தடயவியல் குழு அறிக்கை கொடுத்துள்ளது. இதேதான் காவல்துறையும் தெரிவித்தது. ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி 11 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்தால் முடிவுகள் நம்பத் தகுந்ததாக இருக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சிறப்புப் புலனாய்வுக் குழு மாநில அரசின் கைப்பாவையாக செயல்படுவது அம்பலமாகியுள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை ஆராயவே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும். இதனையே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் கோருகின்றனர்" என்றார். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹத்ராஸுக்கு சென்றிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details