கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கார்கில் போரில் வெற்றிக்கொடி நாட்டி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், ஜூலை 26ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களை வாழ்த்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வீர மரணம் அடைந்தவர்களுக்கு பூங்கா! - கர்நாடகா
பெங்களூரு: சிவமோகா மாவட்டத்தில் கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் உருவம் கொண்ட சிலைகள் அமைக்கப்பட்டு, பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் கார்கிலில் வீர மரணமடைந்தவர்களின் உருவ சிலைகளை வடிவமைத்து பூங்கா திறந்து வைத்துள்ளனர். அம்மாவட்ட நிர்வாகமும், பெங்களூரு ஷில்பகலா அகாடமியும் இணைந்து இந்தப் பூங்காவை 15 நாட்களில் உருவாக்கியுள்ளது. சிவமோகாவில் இதுவரை இதுபோல் ஒரு பூங்கா அமைக்கப்படவில்லை, அதனால் இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இதனை பார்வையிட வந்தவர்கள் கூறியதாவது, வீரர்களின் சிலைகளை பார்க்கும்போது இதுபோல் நமது நாட்டிற்காக நாமும் ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நாட்டிற்காக வீர மரணம் அடைந்தவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இது அமையும் என்று தெரிவித்துள்ளனர்.