மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இன்று காலை அம்மாநில முதலமைச்சராக தேவந்திர ஃபட்னாவிஸூம், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று வரை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறிவந்த நிலையில், இந்நிகழ்வு நிகழ்ந்திருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
’இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ - ஒரே போடாக போட்ட சரத் பவார்!
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு; அது தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல என்று அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் குழப்பும் விதமாக பதிவிட்டுள்ளார். அதில், “பாஜகவுடன் இணைந்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. மகாராஷ்டிராவில் பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அஜித் பவார் முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர கட்சிகள் நொடிக்கு நொடி அதிர்ச்சி அளித்துக்கொண்டே உள்ளன. இதன்மூலம், அரசியல் குழப்பங்கள் எப்போதுதான் தீருமோ என்ற அயர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.