மஹாராஷ்ட்ரா ரத்னகிரி மாவட்டம், சிப்லுன் தாலுகாவில் உள்ள திவாரே அணை கனமழை காரணமாக ஜூலை 3ஆம் தேதி உடைந்தது. இந்த அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஏழு கிராமங்களை சூழ்ந்தது. அதுமட்டுமல்லாமல் கிராமங்களில் இருந்த வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 24பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அணை உடைவதற்கு நண்டுகள் தான் காரணம் என்றும், இது ஒரு இயற்கை பேரிடர் என்றும் அமைச்சர் தானாஜி சாவந்த் கூறியுள்ளார்.
24பேர் பலிக்கு காரணம் நண்டுகள் - அமைச்சர் விளக்கம் - minister
மும்பை: 24 பேரின் உயிரை காவுவாங்கிய அணை உடைப்பிற்கு நண்டுகள் தான் காரணம் என மகாராஷ்டிரா நீர்சேமிப்புத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அணையில் அதிக எண்ணிக்கையில் நண்டுகள் இருந்ததே உடைப்பு காரணம். அணை உடைப்புக்கு முந்தைய நாள் மட்டும் சுமார் 8மணி நேரத்தில் 192மி.மீ மழை பெய்துள்ளது. இந்த எட்டு மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் எட்டு அடி உயர்ந்து விட்டது என்றார்.
இந்நிலையில் அமைச்சரின் இந்த சர்ச்சை விளக்கத்தை விமர்ச்சித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையை கட்டிய ஒப்பந்ததாரர் எனும் பெரிய ஊழல் சுறாவை காப்பாற்றுவதற்காக அமைச்சர் அப்பாவி நண்டுகள் மீது பழிப்போடுகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.