இதுதொடர்பாக, மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், “பெண்கள் பணியாற்றும் அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிக் குழு (விசாகா குழு) அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக் குழுவில் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை நடைமுறைப்படுத்த முடியும். மேலும், அந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
பாலியல் புகார்களை தெரிவிப்பதற்கான கால வரம்பை, பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக நீட்டிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், இணையவழி சார்ந்த குற்றங்களையும் சேர்க்க வேண்டும். இதற்காக, கடந்த 2013ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.