ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி பொறுப்பு காலியாக உள்ள மேல்குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்கள் உள்ளிட்ட ஏழு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை மத்திய அரசு நேற்று நியமணம் செய்துள்ளது.
ஏழு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்!
டெல்லி: ஏழு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.
அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த லிங்கப்பா நாராயணசாமி ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரவி சங்கர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரஜித் மோகன்டி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் குவாகத்தியில் உள்ள அம்மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கோஸ்வாமி சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அஜய் லம்பா, குவகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் நீதிபதி மகேஷ்வரி ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மானிக் குமார் கேரளா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.