ஓடிசாவில் பூரி பகுதியில் பிரபலமான ஜெகந்நாத் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில், நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசிடமிருந்து தப்பிப்பதற்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன.
அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் ஜெகந்நாத் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துள்ளது. அதில், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் சுய தகவல் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும். அந்தப் படிவத்தில், தங்களின் குடும்பத்தினர் யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா என்றும் கொரோனா பாதித்துள்ள பகுதிகளுக்கு கடந்த 15 நாள்களில் பார்த்துவிட்டு திரும்பி வந்தீர்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை நிரப்ப வேண்டும்.
இந்தப் படிவங்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில் வாசலில் உள்ள தகவல் உதவி மையம் ஆகிய இடங்களில் வாங்கி பூர்த்திசெய்ய வேண்டும். இந்தப் படிவம் இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.