ஸ்ரீநகர்: கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதையொட்டி, ஜம்மு, காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையிலும், ஜம்மு- காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
14 மாதம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவரை நேற்று ஜம்மு- காஷ்மீர் அரசு விடுவித்துள்ளது. முன்னதாக, அவர் இத்தனை காலம் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது.
இந்த வழக்கு இன்னும் இரண்டு தினங்களில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
தடுப்புகாவலில் இருந்து வெளியானதும் பேசியுள்ள அவர், சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்துவதற்கான போராட்டம் தொடரும் என்றும் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு எடுத்த முடிவு பகல்கொள்ளை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆடியோ செய்தியில், " "கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டவிரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் பறிக்கப்பட்டதை நாங்கள் திரும்பப் பெறுவோம் என நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண நாம் உழைக்க வேண்டியிருக்கும். இது ஒரு சுலபமான காரியமாக இருக்காது. இந்தப் பாதையில் சிரமங்கள் இருக்கும், ஆனால் இந்தப்பாதையை கடக்க உறுதியுடன் இருப்பது நமக்கு உதவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்படவுள்ள மெகபூபா முஃப்தி!