தீவிரவாதத்தை தடுக்க வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர்.
அப்போது சமூக வலைதளங்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் , சமூக வலைதளங்களை அதிக நபர்கள் நல்ல நோக்கத்தில்தான் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் கருத்துக்கள் எளிதாக , முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல இது ஒரு வழிகாட்டியாக உள்ளது.மேலும் சமூக வலைதளங்களில் எந்த ஒரு பிரச்னை ஏற்படுவது கிடையாது என்று வாதங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ப்ளூவேல் கேமில் எடுத்ததை போல இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளங்களை குற்றசாட்டுவதா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக மத்திய அரசு கூடிய விரைவில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.