தமிழ்நாடு

tamil nadu

முக்கிய தேர்தல் வழக்குகளை இன்று விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

By

Published : Mar 25, 2019, 12:27 PM IST

Updated : Mar 25, 2019, 12:43 PM IST

டெல்லி: ஹோலி பண்டிகை விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளது. இன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன.

உச்ச நீதிமன்றம்

விவிபேட் இயந்திரங்கள் (VVPAT):

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் சரியான முறையில்தான் பதிவாகியுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் 50 சதவிகிதம் வரை பொருத்தி பார்த்து அதன் முடிவுகள் மின்னணு வாக்கு இயந்திரத்தின் முடிவுகளோடு ஒத்துப்போனால்தான் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 21 எதிர்க்கட்சிகளின் மனுத்தாக்கல் செய்திருந்தன. இந்த மனுவை கடந்த மார்ச் 15ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருளை (software) சுதந்திரமாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுவும் விசாரணைக்கு வருகிறது. சமூக செயற்பாட்டாளர்கள் சுனில் அஹ்யா, ரமேஷ் பெல்லகொண்டா ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவில், தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும்படியான மாற்றங்கள் செய்வதை தடுக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

விவிபேட் இயந்திரம்

இரட்டை இலை வழக்கு:

அதேபோல், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

தேர்தல் பேரணி:

தேர்தலையொட்டி சாலை மற்றும் வாகனப் பேரணிகளுக்கு தடை கோரும் மனு, சொத்து குவிப்பு தொடர்பாக முலாயம் சிங் யாதவிற்கு எதிராக சிபிஐ நடத்திய விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யக் கோரும் மனு, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமார் பிணை கோரும் மனு ஆகியவையும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Last Updated : Mar 25, 2019, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details