தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைட்ரோகார்பன் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தை நாட எஸ்.ஏ. போப்டே அறிவுரை - பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான காவிரி விவசாயிகள் சங்கம்

டெல்லி: காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கத் தடைகோரிய பொதுநல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை கோரிய வழக்கு
ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை கோரிய வழக்கு

By

Published : Mar 2, 2020, 2:04 PM IST

Updated : Mar 2, 2020, 2:20 PM IST

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்றும் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதிபெற மக்களிடம் குறைகேட்புக் கூட்டங்கள் நடத்தத் தேவையில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கூடாது என்றும் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான காவிரி விவசாயிகள் சங்கம் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே முன்னர் விசாரணைக்கு வந்தது. காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் ஜி.எஸ். மணி, "ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது" என்று வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதி, இந்த மனு குறித்த விசாரணைக்கு ஏன் நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். "இது தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விவகாரம். எனவே, உச்ச நீதிமன்றம் மனுவை விசாரிக்க வேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவோ, இது வலுவான வழக்கு என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனினும், முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினார்.

இது குறித்து பேசிய பி.ஆர். பாண்டியன், "ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாழாகும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி சென்னை உயர் நீதிமன்றதை நாடி உரிய தீர்ப்பினைப் பெறுவோம். ஹைட்ரோகார்பனுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும்" என்றார்.

இதையும் படிங்க; ‘வேளாண் மண்டலத்தைத் தொடர்ந்து பெட்ரோலிய மண்டலம்’ - முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

Last Updated : Mar 2, 2020, 2:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details