கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்தது.
ஆனால், இந்த நிபந்தனைகளை அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனக்கூறி ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நாடு முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டதால் இது குறித்து தற்போது ஆராயத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசிக்கவேண்டும் எனவும், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.