நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கான சுகாதார மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இத்திட்டம் நிர்ணயித்த விலைப்படி கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என தனியார் மருத்துவமனைகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைகள், கரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.