சில நாட்களுக்கு முன்பு, டிக்டாக் ஆன்லைன் செயலிக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நீதிபதிகள் சுந்தர், கிருபாகரன் ஆகியோர் கொண்ட அமர்வு, 'டிக் டாக் செயலியில் குழந்தைகள் பார்க்கக்கூடாத தவறான பதிவுகள் பல உலவுகின்றன. அத்துடன் தனிநபரின் அந்தரங்கப் பதிவுகள் அத்துமீறி பொதுவெளிகளில் வெளியாகின்றன. எனவே டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும். அத்துடன் இணையப்பாதுகாப்பை உறுதிப்படுத்த, அமெரிக்காவில் குழந்தைகளுக்கென இணையதளப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுபோல் இங்கும் சட்டம் இயற்ற வழிவகை உண்டா? என அரசு ஆராய வேண்டும்' என உத்தரவிட்டது.
டிக் டாக் தடை - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: டிக் டாக் செயலியை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்ததை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த தடை விவகாரம் தொடர்பாக அபிஷேக் மனு சிங்வி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரானது என மனுவில் முறையிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 'உயர்நீதிமன்ற தடை குறித்து பரிசீலனை செய்யப்படும், அதே வேளையில் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது' எனக் கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். ஏற்கனவே வங்கதேசம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.