மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அலுவலராக காவல் ஆணையர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரின் தலைமையில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும், சி.பி.ஐ விசாரணையில், பணமுறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை ராஜீவ் குமார் அழித்தார் என்று குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ முயற்சி செய்த போது, மம்தா தலைமையிலான அரசாங்கம் தடுத்தது.
இதையடுத்து ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதேபோல், கைது செய்வதிலிருந்து தடைவிதிக்க ராஜீவ் குமார் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
மேலும் இந்த கைது நடவடிக்கை தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கைது செய்வதற்கான தடையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த வாரம் விலக்கிக் கொண்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த சனிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகினார். இந்நிலையில் அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்குள் சிபிஐ அலுவலத்தில் அவர் ஆஜராக வேண்டுமென மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.