சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதில் ஆளும் இடதுசாரி அரசு முனைப்பு காட்டியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டங்கள் பாஜக, வலதுசாரி அமைப்புகள் தலைமையில் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற கேரள பாஜக தலைவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்புக்கு எதிரான மனநிலையிலேயே காங்கிரசும் செயல்பட்டது.
தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, இந்தத் தீர்ப்பை அரசு அமல்படுத்தக் கூடாது. இது இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு என்று கருத்து பதிவிட்டிருந்தார். எனினும் அக்கட்சி சபரிமலை தொடர்பான போராட்டங்களை ஆதரிக்கவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று கூறியது.
இவர்களுக்கு நேர் எதிராக ஆளும் இடதுசாரி தரப்பு செயல்பட்டது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் பிரார்த்தனை செய்ய அனுமதிப்பதற்கு ஆதரவாக இருப்பதாகக் அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாகக் கூறினர்.