ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள மகாராணிபேட்ட (maharanipeta) காவல் நிலையத்தில் சைபர் செக்யூரிட்டி இன்டராக்டிவ் ரோபோ மிஸ். சிபிராவை காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரோபோவின் பணியைக் காவல் ஆணையர் ஆர்.கே. மீனா காவல் நிலையத்தில் தொடங்கி வைத்தார். கப்ளர் தனியார் நிறுவனம் இந்த ரோபோவை மக்களிடமிருந்து புகார்களைப் பதிவு செய்யும் வகையில், பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ புகார்களை மனுதாரர் கூறும் போது, குரல் பதிவாகவோ அல்லது ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள லேப்டாப்பில் டைப் செய்தோ பதிவு செய்யலாம்.
இந்த விழாவில், துணை ஆணையர் ரங்கா ரெட்டி, கப்ளர் நிறுவனத் தலைவர் பிரவீன் மல்லா உள்ளிட்ட பல காவல் அலுவலர்கள் இருந்தனர். பின்னர் பிரவீன் மல்லா கூறுகையில், ’ CYBIRA ரோபோவிடம் புகார்களை மக்கள் அளித்ததும், உடனடியாக மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குக் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குள் தீர்க்கும்படி, ஒப்புதல் நகல் சென்றுவிடும். மேலும், அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் புகார் தீர்க்கப்படும்.
மேலும், புகார் மூன்று நாட்களுக்குள் தீர்க்காவிட்டால் உடனடியாக உயர் அலுவலர்களுக்குத் தானாகவே புகார் அளித்துவிடும். அப்போதும், உயர் அலுவலர்களால் தீர்க்கமுடியவில்லை என்றால் அடுத்தது முதலமைச்சருக்குப் புகார் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.