இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தனது மகன் பி.ஒய்.விஜயேந்திராவிற்கான பிரகாசமான அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ததோடு, கட்சியின் மாநிலத் தலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய ஒரு சில கட்சித் தலைவர்களுக்கும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தக்க பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது சட்டப்பேரவையில் பேசிய எடியூரப்பா, ”இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் வென்று, மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன்தான் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி நடத்துகிறது என்பதை நிரூபித்துக் காட்டுவேன்” என்று சவால் விடுத்திருந்தார்.
ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த 16 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான முனிரத்னாவிடம் அவர் அளித்த வாக்குறுதியின்படி, இடைத்தேர்தலில் அவரை எடியூரப்பா வெற்றி பெற செய்துள்ளார்.
மேலும், இடைத்தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தின்போது ”ஆர்.ஆர்.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் முனிரத்னா வெற்றிபெற்றால் அவரை அமைச்சர் ஆக்குவேன்” எனக்கூறி எடியூரப்பா பரப்புரை மேற்கொண்டார். இதனை சாத்தியமாக்க வாக்காளர்கள் முனிரத்னாவிற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்யவேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.
சிராவில் வரலாறு படைத்த பாஜக:
சிரா சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு, அம்மாநில பாஜகவின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் வலதுசாரிக் கட்சிகள் அந்தத் தொகுதிகளில் இதுவரை வென்றதில்லை. இதனுடன், பாஜக இந்தத் தொகுதியில் டெபாசிட்கூட வாங்காது என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை சிராவில் புதிய அரசியல் அத்தியாயத்தை இந்த வெற்றியின் மூலம் பாஜக தொடங்கியுள்ளது.