சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட்-19, தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தீநுண்மி தொற்றுக்குத் தடுப்பு மருந்தை உருவாக்க உலகிலுள்ள பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள மகாத்மா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 தடுப்பு மருந்து குறித்தும், தொற்று பரவலைத் தடுக்கும் முறைகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த ஆராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாபு தாமஸ் கூறுகையில், "மஞ்சளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குர்குமின் என்ற பொருளைக்கொண்டு கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
குர்குமின், டைட்டானியம் டை ஆக்சைடு ஆகியவற்றுடன் வேறு சிலவற்றைச் சேர்த்து, அதைத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் மேல் தெளிக்கலாம். இது தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றார்.