கோவிட்-19 தாக்கம் குறித்து இந்திய சில்லறை விற்பனையாளர்கள், பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், நகரத் திட்ட வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி காணொளி இணைப்பின் மூலமாக இன்று கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, பல்துறைகளைச் சேர்ந்த சங்கப் பிரதிநிதிகள் கோவிட்-19 அச்சுறுத்தலால் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சவால்கள் குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், தொழிற்துறை முன்னெற்றத்திற்காக சில பரிந்துரைகளை வழங்கி, அதற்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
வளர்ச்சித் திட்டங்களில் பல்துறை வல்லுநர்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும்! இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி,“வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றே. கரோனா போன்ற பேரிடர் காலங்களில் இறக்கங்களில் இருந்து மீண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. தொழிற்துறை அமைப்புகள் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியில் மட்டும் பங்களிப்பைச் செலுத்தாமல் காப்பீடு, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற பல்வேறு சலுகைகளை தொழிலாளர்களுக்கு வழங்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டும்.
வீட்டு விநியோகத்திற்கான சேவைகளை மீண்டும் தொடங்க, சில்லறை விற்பனையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். பாதுகாப்பான தகுந்த இடைவெளியோடு, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கிடைக்கச் செய்ய வேண்டும். அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் தேவையான அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சியில் பங்கேற்க பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் , நகரத் திட்ட வடிவமைப்பாளர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, புதிய டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை போன்ற பசுமை அதிவேக நெடுஞ்சாலைகளில், இது போன்ற திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
இந்த லட்சியத் திட்டத்தில் பல்வேறு தொழிற்பேட்டைகள், பூங்காக்கள் உருவாக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிற மத்திய அரசு, சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு, விரைவில் 10,000 கோடி ரூபாய் நிதி அளிக்கவுள்ளது ”என தெரிவித்தார்.
இதையும் படிங்க :'விவேகமற்ற கேள்விகளால் பீதியைக் கிளப்ப வேண்டாம்' - காங்கிரசுக்கு கண்டனம்