பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை மேம்படுத்தும் விதமாக (IN- SPACe) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுவதாகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பன்னாட்டு முதலீடு அதிகரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. விண்வெளித் துறையில் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நவீன தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் பாதையில் மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கால்நடைப் பராமரிப்பை மேம்படுத்தும் விதமாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மோடி கூறுகையில், "முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் பால்துறை உத்வேகம் பெறும்" என்றார்.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து மருத்துவ மூலப்பொருள்களின் இறக்குமதியை குறைக்கும் இந்தியா