கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு மூன்றாவது முறையாக, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நான்காம் கட்ட ஊரடங்கை மாநில அரசு திட்டமிட்டு அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கு உத்தரவில் எந்தெந்த அத்தியாவசியத் தேவைகளுக்குத் தளர்வுகள் வேண்டும் என மக்களிடம் ஆலோசனைகள் கேட்டிருந்தார். இதையடுத்து நேற்று மாலை வரை மக்கள் ஆலோசனைகள் அனுப்பினர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்,''ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவது மிகவும் எளிது தான். ஆனால், மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் அதே நிலைக்கு வருவதற்கு நீண்ட நாள்கள் ஆகும். கடினமாக உழைக்கவேண்டிய தேவை உள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி, மக்களிடமிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வந்துள்ளன. அவையனைத்தும் ஆலோசனை செய்யப்பட்டு பரீசிலிக்கப்பட்டு வருகின்றன. இந்த பரிந்துரைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
வரும் திங்கட்கிழமை முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். துணைநிலை ஆளுநருடன் கூட்டம் நடக்கவுள்ளது. அதையடுத்து ஊரடங்கு உத்தரவுகள் தளர்வு பற்றிய அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடவேண்டும், உணவகங்களில் பார்சல் வசதிப்பெற அனுமதிக்க வேண்டும், சலூன் கடைகள் திறக்கப்படக் கூடாது, தியேட்டர்கள் திறக்கக் கூடாது, மெட்ரோவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க உத்தரவிட்டு சேவையை அனுமதிக்க வேண்டும், பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும், வணிக வளாகங்களில் சில கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வந்துள்ளன. இவையனைத்தும் பரீசிலிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க:தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம்: எட்டு கட்சிகள் எதிர்ப்பு