சீதாமர்ஹி:உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரையும், பிகாரின் சீதாமர்ஹியையும் இணைக்கும் வகையில், ராமர்- சீதா சாலை புதிதாக அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார். இந்தச் சாலையின் வழியாக அயோத்திக்கு ஆறு மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேரணியில் உரையாற்றிய அவர், “அயோத்தியையும், சீதாமர்ஹியையும் இணைக்கும் வகையில் புதிய சாலை ஒன்று அமைக்கப்படும்.
அதற்கு, ராமர்- சீதா சாலை மார்க்கம் என்று பெயரிடப்படும். இந்த சாலை வழியாக ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் பயணிக்கலாம். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக, உங்களை சந்தித்து நன்றி சொல்லவே இங்கு வந்தேன்” என்றார்.
அயோத்தி நில பங்கீட்டு பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் ராமர் கோயில் கட்டும் பூமி அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கின.