முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை சந்திக்க உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறியவுள்ளார். இந்தியா, சீனா நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது முப்படை தளபதிகளும் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணி காக்க இந்தியா உறுதியாக உள்ளது என தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "சிறப்பு பிரதிநிதிகள் அஜித் தோவல், வாங் யி சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ராஜாங்க, ராணுவ ரீதியான பிரச்னையை தீர்க்க இரு தரப்பு உயர் அலுவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்.
மோதலை தவிர்க்கும் நோக்கிலான ராணுவ திரும்பபெறும் நடவடிக்கை சுமூகமாக தொடர இப்பேச்சுவார்த்தைகள் உதவும். இந்திய, சீன எல்லை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான செயல் திட்டத்தின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது" என்றார். ராணுவ திரும்பபெறும் நடவடிக்கையின் முதல் கட்டம் கிழக்கு லடாக் பகுதியில் நிறைவடைந்துள்ளது.