வெடித்த சர்ச்சை:
மேற்கு வங்க அரசு கடந்த 2013-ம் ஆண்டு சாரதா சிட் நிதி மற்றும் ரோஸ்வேலி சிட் நிதி மோசடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழுவுக்கு கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் தலைமை வகித்தார். ஆனால், சாரதா சிட் நிதி மோசடி தொடர்பான பல ஆவணங்கள் மாயமானதாக ராஜீவ் குமாருக்கு சிபிஐ அழைப்பாணை விடுத்தும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை நேரில் விசாரிக்க அவருடைய வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், மாநிலக் காவல் துறைக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அம்மாநில காவல் துறையினருக்கு ஆதரவாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோதாவில் குதித்தார்.
நீதிமன்ற உத்தரவு:
இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற சிபிஐ, காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும் என்றும், சாட்சியங்களை அழிக்க, அவர் முயற்சிப்பதாகவும் கூறி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. பொது இடமான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சிபிஐ முன் ஆஜராகி முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என கூறி வழக்கை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.