கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல் ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் ஜூன் 23 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்த மருந்துக்கு கொரோனில் மற்றும் ஸ்வசரி (Coronil and Swasari) என பெயர் வைத்துள்ளதாகவும், மருத்துவ ரீதியிலான சோதனையில் 100 விழுக்காடு வெற்றியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்தின் மூலம் மிதமான அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 3 முதல் 7 நாள்களில் 100% பூரணகுணமடைந்து விடுவார்கள் என்றும், இந்த மருந்தை பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனமான NIMS இணைந்து தயாரித்துள்ளதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது குறித்து தெரிவித்திருந்த ஆயுஷ் அமைச்சகம், உரிய பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் அதனை கரோனாவுக்கான மருந்து என விளம்பரப்படுத்தக்கூடாது என தெரிவித்திருந்தது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்தை தயாரிக்க உரிமம் பெற்றுவிட்டு கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள பதஞ்சலி நிறுவனத்துக்கு, உத்தரகண்ட் ஆயுர்வேதத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.