நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரசின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் பொருட்டு பொதுப் போக்குவரத்துகளும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கை உபயோகமாக்கிய இந்தியன் ரயில்வே
டெல்லி: தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கைப் பயன்படுத்தி இந்தியன் ரயில்வே நிலுவையில் இருந்த 200க்கும் மேற்பட்ட பணிகளை முடித்துள்ளது.
கடந்த காலத்தில் முடிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த முக்கியப் பணிகளை, இந்த ஊரடங்கு காலத்தில் முடிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டது. இதையடுத்து, யார்டு புனரமைத்தல், பழைய பாலங்களைப் பழுதுபார்த்தல், மறுசீரமைத்தல், தண்டவாளங்களை இருவழிப்பாதையாக்குதல், மின்மயமாக்குதல், குறுக்குவழிகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்கொண்டது.
இப்பணிகளை மேற்கொள்ளும்போது பெரும்பாலும் போக்குவரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். இந்த பராமரிப்புப் பணிகளுக்காகப் போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தவேண்டிய அவசியமும் ஏற்படும். எனவே, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கைப் பயன்படுத்தி ரயில்வே துறையில் நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள இதுபோன்ற 200க்கும் மேற்பட்ட பணிகளை முடித்துள்ளோம் என இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.