கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை நாடு முழுவதும் இந்த வைரஸால் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 549ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கை சில தளர்வுகளுடன் நான்காவது முறையாக நீட்டிப்பது குறித்த அறிவிப்பை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்திய மத்திய அரசு, பயணிகள் ரயில் சேவையை மே 12ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி வழங்கியது. நாடு தழுவிய பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை சுமார் 50 நாள்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இருந்தபோதிலும் ரயில் சேவையை தொடங்கியதற்கு பல்வேறு மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.