மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாளை முதல் தொடங்கும் தேர்தல் மே 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் களமிறங்குகிறார்.
அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி
அமேதி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வயநாடு தொகுதியில் வேட்புமனுவை சமீபத்தில் தாக்கல் செய்த அவர், அமேதி தொகுதியில் எப்போது தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே எழுந்திருந்தது.
இந்நிலையில், அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ்வரை 3 கிலோ மீட்டருக்கு வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தை மேற்கொள்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பியாக இருக்கும் ராகுல் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி ராணியை லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.