டெல்லி:மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியை இணைக்கும் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு கடந்த நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், மத்திய அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
இதற்கிடையில், சுமார் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (டிச. 24) குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிப் பேரணி நடைபெறவுள்ளது.